4 தென் மாவட்டத்தினர் பயன்பெறும் நெல்லை அரசு மருத்துவமனையில்... நோயாளிகளின் உறவினர்களுக்கு வானமே கூரை

நெல்லை: நெல்லை ஐகிரவுண்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் உள்ளனர். மகளிர் மகப்பேறு மருத்துவப்பிரிவு மற்றும் தாய்சேய் நலப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் உள்ளனர். இவர்களுடன் வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக புதிய தாய் சேய் நல பிரிவு வளாகத்தில் சிகிச்சைக்கு வருபவர்களுடன் வரும் உறவினர்கள், நோயாளிகளின் நலன் கருதி உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை இதனால் அந்த கட்டிடத்தின் எதிரே உள்ள திறந்தவெளி பகுதியில்தான் அவர்கள் வானமே கூறையாக அமர்ந்து இருக்கின்றனர்.

இதனால் அவர்கள் பல தொந்தரவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. சில நோயாளிகள் 10 முதல் 20 நாட்கள் வரை உள்ளே சிகிச்சை பெறுவதால் அதுவரை இவர்கள் வெளி பகுதியில் மூட்டை முடிச்சுகளுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் அங்குள்ள மரக்கிளைகளில் தொட்டில் கட்டி படுக்க வைக்கின்றனர். மற்றவர்கள் தரையிலேயே படுத்துக்கொள்கின்றனர். உணவு வியாபாரிகள் கொண்டுவரும் உணவை வாங்கி அங்கேயே சாப்பிட்டுக்கொள்கின்றனர்.

நோயாளிகளின் உறவினர்களை ஸ்பீக்கர் மூலம் பெயர் சொல்லி அழைக்கப்படுபவர் மட்டும் தற்காலிகமாக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு வரலாம் என அவர்கள் வெளியில் காத்திருக்கின்றனர். மேலும் மருந்து, மருத்துவ பரிசோதனை சீட்டு போன்றவைகளை வாங்க செல்லவேண்டியிருப்பதால் அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் அங்கேயே காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்காக குறைந்தது ஒரு நோயாளிக்கு 2 பேராவது வெளியில் காத்திருக்கின்றனர். அந்த இடத்திலேயே இரவில் படுத்து தூங்குவதால் பாதுகாப்பு குறைவும் உள்ளது.

சில நேரங்களில் மர்ம பெண்கள் செல்போன் போன்றவைகளை திருடும் முயற்சியும் பிடிபடுவதும் போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. வெளி பகுதியில் குளிக்க செல்பவர்களுக்கு ஒரு நபருக்கு 25 ரூபாய் வாங்கப்படுகிறது. குழந்தைகளின் துணிகளை அங்கு அலசி துவைக்க அனுமதி கிடையாது. இயற்கை உபாதைகளுக்கும் நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி நோயாளிகளின் உதவிக்கு வரும் உறவினர்களுக்காக தகுந்த அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: