மரண தண்டனையை எதிர்த்து தாக்கல்: முஷாரப் மனுவை திருப்பி அனுப்பியது ஐகோர்ட்

இஸ்லாமாபாத்: தேசத் துரோக  வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை லாகூர்  உயர் நீதிமன்றம் திருப்பி அனுப்பி  உள்ளது.  பாகிஸ்தான் அதிபராக  இருந்த போது, கடந்த 2007ல் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பாக, பர்வேஷ்  முஷாரப் மீது கடந்த 2014ல் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக துபாய் சென்ற  முஷாரப், மருத்துவ சிகிச்சையை  காரணம் காட்டி அங்கேயே தங்கி விட்டார். தேசத்துரோக வழக்கில் அவர்  ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த  சிறப்பு நீதிமன்றம், முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த 17ம் தேதி  தீர்ப்பு வழங்கியது.  இதை எதிர்த்து முஷாரப் தரப்பில் அவரது வக்கீல்  அஜார் சித்திக், லாகூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த 86  பக்க மனுவில், `நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த  நடவடிக்கையையும்  முஷாரப் எடுக்கவில்லை. தேசத் துரோகத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.  ஆனால், முஷாரப்பின் இந்த மனுவை   லாகூர் உயர் நீதிமன்ற பதிவாளர் திருப்பி  அனுப்பி  விட்டார். மேலும், நீதிபதிகள் குளிர்கால விடுமுறைக்கு சென்றுள்ளதால்,  அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யும்படி முஷாரப்பின் வக்கீலுக்கு நீதிமன்ற பதிவாளர் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories: