ஊட்டி : கொரோனா இரண்டாவது அலையால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு கெரோனா ஊரடங்கு காரணமாக கோடை சீசன் விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஊட்டியில் சுற்றுலா தொழிலை நம்பி இருந்தவர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பூங்காக்களும், டிசம்பர் மாதத்தில் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. தொடர்ந்து இ-பதிவு முறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா தலங்களும் களை கட்டின. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சிறு தொழிலாளர்கள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வருவாய் ஈட்ட துவங்கினர். கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட கோடை விழா இம்முறை நடைபெறும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் தீவிரமைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை ஏதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி காற்று வாங்குகின்றன. இந்த சூழலில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், இம்முறையும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்டவைகள் நடைபெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.ஓட்டல்கள், காட்டேஜ் உரிமையாளர்கள், அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வா்க்கி, சாக்லேட், நீலகிரி தைலம் விற்பனை செய்பவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் புகைப்பட தொழில் செய்து வருபவர்கள் உள்ளிட்ட சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்து வர கூடிய சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக கூடிய சூழல் உருவாகியுள்ளது….
The post கொரோனா 2வது அலையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது appeared first on Dinakaran.