சம்பா ரவையை சாப்பிட்டதால் வயிற்று கோளாறு தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: உணவு பாதுகாப்பு அதிகாரி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ரவிகாந்த் ரம்பால் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்டம்பர் 7ம் தேதி எனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் மயில் மார்க் சம்பா ரவை வாங்கினேன். அந்த ரவையை சமைத்து சாப்பிட்டவுடன் எனக்கு உடலில் அஜீரண கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து எனக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. இதையடுத்து, மறுநாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன்.

மருத்துவ சிகிச்சை அறிக்கையில் நான் சாப்பிட்ட உணவால்தான் பிரச்னை ஏற்பட்டதாக தெரியவந்தது. ஏற்கனவே, இதே பிராண்ட் ரவையில் குளோரோபிரிபோஸ் என்ற கெமிக்கல் கலந்துள்ளதாக செய்தி வௌிவந்துள்ளது. இதையடுத்து, அந்த கோவையில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நானே அந்த சம்பா ரவையை ஒரு கிலோ வாங்கி கோவையில் உள்ள அனால்டிகல் லேபில் பரிசோதனைக்கு கொடுத்தபோது ஒரு கிலோவில் 0.166 மில்லிகிராம் குளோரோபிரிபோஸ் கெமிக்கல் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. எனவே, சம்மந்தப்பட்ட ரவையை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க கோரி நான் கொடுத்த மனுவை பரிசீலிக்குமாறு கோவை உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 21ம் தேதிக்குள் கோவை உணவு பாதுகாப்பு அதிகாரி, ரவை தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டோர் பதில் தருமாறு உத்தரவிட்டார்.

The post சம்பா ரவையை சாப்பிட்டதால் வயிற்று கோளாறு தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: உணவு பாதுகாப்பு அதிகாரி பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: