சிதிலமடைந்த மெஞ்ஞானபுரம்- திருச்செந்தூர் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

உடன்குடி:  சிதிலமடைந்து காணப்படும்  மெஞ்ஞானபுரத்தில் - திருச்செந்தூர் சாலையால்  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 கோயில் நகரமான திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில்  பக்தர்கள், சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாகவும் ஏராளமான அரசுப்பேருந்துகள், தனியார் வாகனங்கள், வந்து செல்கின்றன. இச்சாலையானது பலஆண்டுகளுக்கு முன்னர் அகலப்படுத்தி அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இந்த சாலையை மழைக்காலத்திற்கு முன்னரே சீரமைக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தும்  அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சாலையில் ஆங்காங்கே கட்டிட கழிவுகளை பள்ளங்களில் நிரப்பியுள்ளனர். இதனால் சாலை சகதி காடாக மாறியுள்ளது. சாலையில் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இதனால் சாலையில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.  தொடர்ந்து பல மாதங்களாக சிதிலமடைந்து காணப்படும் இந்த முரட்டுச்சாலையில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தினமும் வாகன ஓட்டிகள் மல்லுகட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: