குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு: கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னனி நிறுவனங்களின் பணியாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம்

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்து நாட்டை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னனி நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  உலகின் முன்னனி நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 150 பேர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஐ.டி.பணியாளர்கள் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பாசிச நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லீம் மக்களுக்கு எதிராக புதிய சட்டங்களை வகுத்து, இந்து நாட்டை உருவாக்க முயற்சி நடப்பதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போராட்டங்களை ஒடுக்க இணைய வசதியையும் முடக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.டி. பணியாளர்கள், பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை, ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ட்விட்டர், ஊபர், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போராட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்து வந்த நிலையில், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐடி பணியாளர்களும் குரல் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: