உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் காலமானார்

சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் (89), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்று காலமானார். இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. கவுதமன் மோகன் என்ற மகனும், சுமதி சுப்பிரமணியன் என்ற மகளும் உள்ளனர். மனைவி திலகவதி ஏற்கனவே இறந்துவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 1954ம் ஆண்டு வக்கீல் தொழிலை தொடங்கிய எஸ்.மோகன், உதவி அரசு வக்கீல், அரசு வக்கீல், சிறப்பு அரசு வக்கீல் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார்.

பின்பு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். சில காலம் கர்நாடக மாநில பொறுப்பு கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.  இவரது இறுதி சடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வெங்கிடகிருஷ்ண அய்யர் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கிறது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘கலைஞரின் நண்பரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசருமான எஸ்.மோகன் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதன் முறையாக திமுக ஆட்சி அமைந்த போது, சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, பிறகு கலைஞர் அவர்கள் முதல்வரான போது அரசு வழக்கறிஞராகவும், அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி கழக அரசின் பல்வேறு சாதனைச் சட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர். சிறந்த எழுத்தாளரும் கூட. எனக்கு கலைஞர் விட்டுச்சென்ற உயிருக்கு உயிரான, பாசமிகு  ஆசான் ஒருவரை நான் இழந்து தவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Related Stories: