மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு நீர்திறப்பு ஜன.15ம் தேதி வரை நீட்டிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை, 137 நாட்களுக்கு மொத்தம் 9.60 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஆகஸ்ட் 13ம் தேதி, கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, டிசம்பர் 27ம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மண்டல் தலைமை பொறியாளர் அறிவுறுத்தலின்பேரில், கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வரும் ஜனவரி 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 19 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3,268 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 3,187 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 118.82 அடியாவும் நீர் இருப்பு 91.60 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories: