மலைவாழ் மக்களை விரட்டியடித்த வனத்துறை: போடி அருகே பரபரப்பு

போடி: தேனி மாவட்டம், போடி அருகே பனங்கன்குடை மலைக்கிராமம் உள்ளது. இங்கு 25 மலைவாழ் குடும்பங்கள் 4 தலைமுறையாக வசிக்கின்றனர். இவர்கள் அருகில் உள்ள காபி தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து பிழைப்பு நடத்துகின்றனர். நேற்று கருப்பையா என்ற தொழிலாளி, காபி கொட்டை மூட்டையை தலையில் சுமந்து கொண்டு போடிக்கு ஒற்றையடி மலைச்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வனத்துறை வாட்சர் பாண்டி, திடீரென கருப்பையாவை தடுத்து நிறுத்தினார். அவரது தலையில் இருந்த மூட்டையை கீழே தள்ளியதோடு, கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், ‘பனங்கன்குடை மலைக்கிராமத்தில் யாரும் இருக்க கூடாது; தரைப் பகுதிக்கு உடனே இறங்கி ஓடிவிட வேண்டும்’ என மிரட்டி விரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பையா நடந்த சம்பவத்தை மலைவாழ் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரிடம் சென்று முறையிட்டனர்.

இதையடுத்து விவசாயிகள் சங்க தலைவர் மூக்கையா, மலைவாழ் மக்களை அழைத்துக் கொண்டு போடி தாசில்தார் மணிமாறனிடம் புகார் செய்தார். அதற்கு தாசில்தார், வனத்துறையிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர். மலைக்கிராமத்தை சேர்ந்த கருப்பையா, மாரியப்பன் கூறுகையில், ‘‘4 தலைமுறையாக இங்கு வசிக்கிறோம். தற்போது மலையில் இருக்கக்கூடாது என வனத்துறையினர் மிரட்டுகின்றனர். எங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. தற்போது எங்களை வனத்துறையினர் காலிபண்ண சொல்லி மிரட்டுகின்றனர். நாங்கள் குழந்தை, குட்டிகளுடன் எங்கே செல்வது? நாங்கள் வசிக்கும் பகுதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி தொகுதியில்தான் உள்ளது. அவர்தான் எங்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: