தேர்வு விடுமுறை எதிரொலி பைன் பாரஸ்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*குதிரை சவாரி செய்து மகிழ்ச்சி

ஊட்டி :  ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அப்பகுதி களைகட்டியுள்ளது.   நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் நகரில் அமைந்துள்ள பூங்காக்களுக்கு செல்வதை காட்டிலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, அவலாஞ்சி, பைக்காரா நீர்வீழ்ச்சி, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்து ரசிக்கின்றனர்.

இதனிடையே ஊட்டி - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். பைன் மரங்களுக்கு மத்தியில் புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். பைன் பாரஸ்ட் சரிவான பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வசதியாக தட்டையான கற்கள் கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் பள்ளி அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறையை கொண்டாடும் வகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன. பைன் மரங்களுக்கு மத்தியில் நடந்து காமராஜர் சாகர் அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர்.

Related Stories: