இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இல்லை தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு உபி ஷியா வக்பு வாரியம் ஆதரவு: ‘ஊடுருவல்காரர்கள் வெளியேற வேண்டும்’ என கருத்து

லக்னோ: ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆதரிக்கிறோம்’ என உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் கூறியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் உபி. ஷியா மத்திய வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு காரணமாக இந்திய முஸ்லிம்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதை நாட்டில் அமல்படுத்த வேண்டும். நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஊடுருவல்காரர்களை அடையாளம் காண்பதுதான் இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம்.

ஊடுருவல்காரர்கள்தான் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளின் ஓட்டு வங்கியாக உள்ளனர். வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை காங்கிரஸ் வழங்கியது. தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால், அவர்களின் உண்மையான முகம் தெரியவரும். மற்ற நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள் எல்லாம், அங்கு நடந்த அடாவடிகளால் இந்தியாவுக்கு வந்தனர். ஆனால், வெளிநாட்டு முஸ்லிம்கள் சுய ஆதாயத்துக்காக இந்தியா வந்தவர்கள். இது நம் நாட்டுக்கு ஆபத்து. இந்திய முஸ்லிம்கள் மட்டுமே இந்தியர்கள். மற்றவர்கள் எல்லாம் ஊடுருவல்காரர்கள். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் எல்லாம் சதி செயல்கள் என்று கூறினார்.

Related Stories: