சூரிய கிரகணத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: சூரியகிரகணத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆகம விதிகளின்படி சந்திர கிரகணத்தின்போது கிரகணம் முடிந்ததும், சூரிய கிரகணத்தின்போது கிரகணம் தொடங்கும் முன்பும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். கிரகண நேரத்தில் கோயில் நடை அடைப்பதில்லை. சூரிய கிரகணம் இன்று காலை 8.08 மணிக்கு தொடங்கி 11.19மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டதும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் 8.08மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியதும், மேளதாளம் முழங்க அண்ணாமலையார் சூல வடிவில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: