மாதவிடாய் நாளில் கூலி இழப்பை தவிர்ப்பதற்காக கரும்பு கூலி பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றும் கொடுமை: மகாராஷ்டிரா முதல்வர் தலையிட காங்கிரஸ் அமைச்சர் கோரிக்கை

மும்பை: கூலி இழப்பை தவிர்ப்பதற்காக பெண் கரும்பு கூலித் தொழிலாளிகள் தங்கள் கருப்பையை அகற்றும் கொடுமை மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. இந்த பிரச்னையில் உடனே தலையிடக்கோரி மாநில அமைச்சர் நிதின் ராவுத் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மத்திய மகாராஷ்டிராவில் உள்ள மராத்வாடா பிராந்தியத்தில் கரும்புத் தொழிலாளிகள் பெருமளவில் உள்ளனர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கின்றனர். மாதவிடாய் காலங்களில் இந்த பெண்கள் வேலைக்கு செல்வதில்லை. எனவே அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றி விடுவதாகவும் இதுபோன்று சுமார் 30,000 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி இருப்பதாகவும் நிதின் ராவுத் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பெண்களுக்கு மாதவிடாய் காலமான நான்கு நாட்களுக்கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசு மனிதாபிமான அடிப்படையில் இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட இலாகாவுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று நிதின் ராவுத் தமது கடிதத்தில் கோரியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் நிதின் ராவுத், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஜவுளித்துறை உள்ளிட்ட இலாகாக்களை தன் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: