வளிமண்டல சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கொள்ளிடம், சீர்காழி ஆகிய இடங்களிலும், கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரிலும் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் டிசம்பர் வரையில் குறைவாக மழைப் பதிவு பதிவான இடங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 33 சதவிகிதம் அளவுக்கு மழை குறைவாக பதிவாகி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை 17 சதவிகிதம் குறைவாக இருந்தாலும், இது இயல்பை ஒட்டிய அளவே என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக வடகிழக்குப் பருவ மழையை பொறுத்தவரை 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டும், ஆனால், 45 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கிடைத்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமான வெப்பநிலை 22 டிகிரி செல்ஷியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: