பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில், 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி(59), அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், சவுதி அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். இதனால் அவர் சவுதி அரசின் கடும் கோபத்துக்கு ஆளானார். இதனிடையே, தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக ஜமால் கசோகி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார்.

அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றார். அதன் பின்னர் அவர் மாயமானார். சவுதி தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு குற்றம்சாட்டியது. ஆனால் கசோகி கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. பின்னர் தங்கள் நாட்டை சேர்ந்த சில ஏஜெண்டுகள் தனிப்பட்ட முறையில் ஜமாலை கொலை செய்ததாக சவுதி அரேபியா அறிவித்தது. இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் சவுதி அரேபிய அரசு தெரிவித்தது. ஆனால் அந்த வழக்கு குறித்த விவரங்கள் வெளிப்படையாக இல்லை.

இந்த நிலையில், தற்போது கசோகி கொலைக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள அந்நாட்டு வழக்கறிஞர் ஷேக் சவுத் அல்-முஜிப்சைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கசோகி கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகவும், மேலும் 3 பேருக்கு மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு முக்கிய சவுதி அதிகாரிகளான முன்னாள் துணை புலனாய்வுத் தலைவர் அகமது அல் அசிரி மற்றும் சவுத் அல் கஹ்தானி ஆகியோர் மீதான குற்றம் நிரூபனமாகாத நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: