சர்க்கஸ், சினிமா சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட தாய்லாந்தில் இருந்து கங்காரு எலி, சிவப்பு காது அணில் கடத்தியவர் கைது

சென்னை: சர்க்கஸ், சினிமா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகை விடும் நோக்கத்தில் மரப்பல்லி, மரநாய்கள், சிவப்பு காது அணில் ஆகியவற்றை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் என்பவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி கிரீன்சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். ஆனால் அவர் கையில் பெரிய சூட்கேஸ் வைத்திருந்தார்.

இதனால் அவரை தடுத்து நிறுத்தி  சூட்கேஸ் பைகள், பிளாஸ்டிக் கூடைகளை அதிகாரிகள் திறந்துபார்த்தனர். அதில் வட அமெரிக்கா கண்ட வனப்பகுதியில் இருக்கும் மரப்பல்லிகள் 5, மர எலிகள் எனப்படும் கங்காரு எலிகள் 12, மரநாய்கள் 3, சிவப்பு காது அனில் 1. என மொத்தம் 21 அரியவகையான விலங்குகள் இருந்தன. அவற்றை கூடையில் போட்டுவிட்டனர். விசாரணையில் முகமது மொய்தீன் கூறியதாக சுங்கத்துறையினர் தெரிவித்ததாவது: நான் தாய்லாந்துக்கு சொந்த வேலையாக சென்றுவிட்டு திரும்பி வந்தேன்.

பாங்காக் விமான நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் என்னிடம் இந்த சூட்கேஸ்ஸையும் ஒரு பையையும் கொடுத்து இதை எடுத்துச்செல்லுங்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து நீங்கள் இறங்கியதும் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் உங்களை சந்திப்பார்கள் அவர்கள் இந்த சூட்கேஸையும் பையையும் கொடுத்தால் உங்களுக்கு ரூ20,000 சன்மானம் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். பணத்துக்கு ஆசைப்பட்டுத்தான் வாங்கிவந்தேன் என்றார். எனினும்  சுங்க அதிகாரிகள் முகமதுவை கைது செய்தனர். அத்துடன் சென்னையில் உள்ள மத்திய வன குற்றத்தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சென்ட்ரல் வையில்ட் லைன்ஸ் பீரோ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் விரைந்து வந்து விலங்குகளை ஆய்வு செய்துவிட்டு விலங்குகளுக்கான மருத்துவ நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்த விலங்குகளிலிருந்து கிருமிகள் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விலங்குகளை இந்தியாவில் வைத்திருப்பது ஆபத்தானது. உயிரியல் பூங்காக்களிலோ மற்றும் தனியார் விலங்குகள் கூடங்களிலோ அனுமதிக்கவும் முடியாது என்று கூறினர். இதையடுத்து அதிகாரிகள் 21 அரிய வகைவிலங்குகளையும் நாளை காலை (இன்று அதிகாலை) சென்னையிலிருந்து பாங்காங்க் செல்லும் விமானத்தில் தாய்லாந்துக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கான செலவுகளை கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்கவும் முடிவு செய்தனர். மேலும் இந்த விலங்குகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று அதிகாரிகள் விசாரித்தனர். மத்திய வனத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர், இந்த அரியவகை விலங்குகளை கடத்திக் கொண்டுவந்து ரகசியமாக வளர்த்து சர்க்கஸ், சினிமா குழுவினர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு பயன்படுத்தலாம். அதோடு இந்த விலங்குகளை பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளில் காட்சிப் பொருட்களாகவும் வைக்கலாம் என்பது தெரியவந்தது. முகமது மொய்தின் ஏற்கனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டாரா அல்லது கடத்தல் காரர்களுடன் தொடர்பு உடையவரா இந்த விலங்குகளை சென்னையில் இவரிடம் வாங்க வந்தவர் யார் என்று விசாரிக்கின்றனர்.

Related Stories: