மும்பை: ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இந்தியப் பிரபலங்கள் 100 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அஜித் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டு தோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது 2019ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்களின் ஆண்டு வருமானம், புகழ் மற்றும் சமூக வலைதளத்தில் உள்ள வரவேற்பு ஆகியவற்றை முன்வைத்து 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 252.72 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி முதலிடத்தில் உள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி. நடிகர்களில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் 293.25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, புகழின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். சல்மான் கான் ரூ.229.25 கோடி வருமானத்துடன் 3வது இடம் பிடித்துள்ளார்.