விவசாயிகளின் பந்த் அறிவிப்பால் ஆந்திர மாநிலம் அமராவதி நகரைச் சுற்றியுள்ள 29 கிராமங்களில் 144 தடை உத்தரவு: போலீசார் குவிப்பு!

அமராவதி: விவசாயிகளின் பந்த் அறிவிப்பால் ஆந்திர மாநிலம் அமராவதி நகரைச் சுற்றியுள்ள 29 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம் கடந்த 2014ல் பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலம் உருவானது. ஹைதராபாத் இதன் தலைநகராக அறிவிக்கப்பட்டதால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாமல் போனது. இதையடுத்து குண்டூர் மாவட்டம் கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி என்ற பெயரில் புதிய தலைநகரம் அமைக்க முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு முடிவு செய்தது. இதனை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெகன்மோகனும் ஏற்றுக்கொண்டார்.

தலைநகர் அமராவதிக்காக அப்பகுதி விவசாயிகள் தாமாக முன்வந்து 33,000 ஏக்கர் நிலம் வழங்கினர். இதையடுத்து, அமராவதியில் முதற்கட்டமாக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. புதிய தலைமைச் செயலகத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சி நடத்தியது. இந்நிலையில் ஆந்திராவில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பதவியேற்றார். அவர் முதல்வரானதும் முந்தைய அரசின் பல்வேறு திட்டங்களை மாற்றி அமைத்தார். இதில் தலைநகராக அமராவதியை உருவாக்கும் திட்டமும் மாற்றி அமைக்கப்படும் என கடந்த 6 மாதங்களாக பேச்சு நிலவியது.

இந்நிலையில் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். முதல்வர் ஜெகன்மோகனின் இந்த அறிவிப்பால் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக குண்டூரில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் விவசாயிகள் தர்ணா செய்தனர். தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் அமராவதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று பந்த் நடத்தவும் விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அமராவதி நகரை சுற்றியுள்ள 29 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளளனர். எனினும், தடையையும் மீறி விவசாயிகள் அங்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது டிராக்டர்கள், வண்டிகள் ஆகியவற்றை நிறுத்தி சாலை மறித்து வைத்துள்ளனர். மேலும், கையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வைத்துள்ள விவசாயிகள், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அரசாங்கம் உறுதியளிக்கும் வரை தாங்கள் போராட்டங்களை அமைதியாக நடத்துவதாகவும்  அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: