குடியுரிமை திருத்த சட்டம் செல்லுமா? சுப்ரீம் கோர்ட் ஆராய முடிவு: 59 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், அரசியல் சாசன சட்டப்படி செல்லுமா? என்பதை ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன் வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளான இந்து, சீக்கியர், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள், ஜெயின் மற்றுமர் பார்சி இனத்தவருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் அசாம் ஒப்பந்தத்துக்கு, இந்த சட்ட திருத்தம் எதிரான என அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம்கள், இந்த சட்டத் திருத்தத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி போராட்டம் நடத்துகின்றனர். இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜமியா பல்கலைக் கழக மாணவர்கள் சில தினங்களுக்கு முன் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இது மிகப்பெரும் சர்ச்சையாகி தற்போது நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அந்தந்த மாநில உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் வழக்கின் அவசியம் கருதி விசாரணைக்கு குழு அமைக்கலாம் என்றும் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் மொத்தம் 59 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ‘குடியுரிமை திருத்த சட்டம், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. அதனால், குடியுரிமை திருத்த சட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும், இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வாதிடுகையில், ‘‘குடியுரிமை திருத்த சட்டத்தில் உள்ள விஷயங்கள், நோக்கம் மற்றும் எதிர்ப்புகள் குறித்து பொது மக்களுக்கு வீடியோ காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’’ என்றார். இந்த ஆலோசனையை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் ஏற்றுக் கொண்டு, இதற்கு தேவையானதை அரசு செய்யும் என தெரிவித்தார். மற்ற மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்,’ என்றனர். அசாமில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘வடகிழக்கு மாநிலங்களில் 5 மாணவர்கள் இறந்துள்ளதால், இந்த திருத்த சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது,’ என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கே.கே.வேணுகோபால், ‘‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது என ஏற்கனவே 4 தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது,’’ என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘நாங்கள் இந்த திருத்த சட்டத்துக்கு தடை விதிக்கப் போவதில்லை. இந்த திருத்த சட்டம்,  அரசியல் சாசன சட்டப்படி செல்லுமாஉ என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த மனுக்களுக்கு மத்திய அரசு ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்,’’ என தெரிவித்தனர்.

இறுதி உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்க திமுக கோரிக்கை

நேற்றைய விசாரணையின்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் தமிழகத்தில் குடியேறிய லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் வழக்கில் ஒரு இறுதி உத்தரவு வரும் வரை சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையிலேயே தொடர உத்தரவிட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

வக்கீலாக மாறிய முன்னாள் முதல்வர்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது அசாம் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நீதிமன்றத்தில் வக்கீலாக ஆஜர் ஆனார். தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவாலுக்கு முன் இவர் 3 முறை அசாம் மாநில முதல்வராக பதவி வகித்தவர். இந்த வழக்கு விசாரணைக்காக தருண் கோகாய் வக்கீல்கள் அணியும் கருப்பு கவுன் அணிந்து நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார். இந்த புகைப்படத்தை அவரது மகனும் கலியாபூர் மக்களவை தொகுதி எம்பியுமான கவுரவ் கோகாய் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் வாதாடிய வக்கீல்கள்

வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். பாப்டே தலைமையிலான அமர்வு முன் நடந்த இந்த விசாரணையின்போது பல வக்கீல்கள் ஒரே நேரத்தில் சத்தமாக வாதாட தொடங்கினர். இதற்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், `‘ஒரே நேரத்தில் 4 வக்கீல்கள் முழக்கமிடுகின்றனர். இந்த வக்கீல்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும்போதும் இவ்வாறுதான் ஒரே நேரத்தில் முழக்கமிட்டு வாதிடுகின்றனர். இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் ஒரு வக்கீல்தான் வாதிடுவார். எனவே வக்கீல்கள் இதுபோன்று கோரசாக வாதிடக்கூடாது. பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் இதே நடைமுறை உள்ளது. இதையே இங்கும் பின்பற்ற வேண்டும்’ என்றார்.

Related Stories: