நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கோரிக்கை....டெல்லி சிபிஐ-இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம்

பெங்களூரு: தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கர்நாடக போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா உயர் நீதிமன்றம் போலீசாருக்கு விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில்  நித்தியானந்தா தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோவில் போலீசாரையும் கிண்டல் செய்து நித்தியானந்தா பேசியுள்ளார்.  முன்பு நாட்டில் பெரியளவில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தான் அதை திசை திருப்ப என்னை பற்றி செய்திகள் வெளியாகும். ஆனால், தற்போது முழு நேரமும் ஊடகங்கள் என்னை பற்றி தான் பேசுகின்றன.

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா... உங்களால் தான் கைலாசா பிரபலமானது. கிரி படத்தில் வரும் வடிவேல் காமெடியை போல் `எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா’ என்பதுபோல் எனது நிலை மாறிவிட்டது. கைலாசா தனி நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. கடவுளின் அருளால் கைலாசாவை அமைப்பதை எனது திருப்பணியாக செய்தே தீருவேன் என அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று வழக்கின் விசாரணை நடைபெற்றது. நித்தியானந்தா எங்கே பதுங்கி இருக்கிறார்? என்பது குறித்து தகவல் தெரிவிக்க சிபிஐ மூலமாக இண்டர்போல் உதவியை நாடி உள்ளதாகவும், இதற்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா சிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் டெல்லி சிபிஐ-இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: