CAA-க்கும் NRC-க்கும் வித்தியாசம் உள்ளது: குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை பாதிக்காது....இஸ்லாமிய இயக்க தலைவர் இமாம் சையது கருத்து

டெல்லி: புதிய குடியுரிமை சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை ஒன்றும் பாதிக்காது என டெல்லி ஜூம்மா மசூதி தலைவர் ஷாஹி இமாம் சையது அகமது புஹாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் போராட்டம்:

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. வடகிழக்கில் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து,  டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், உத்தரப் பிரதேசத்தில்  உள்ள அலிகார் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும் வன்முறைகள் அரங்கேறின. அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும்,  கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்தினர். டெல்லியை தொடர்ந்து மேற்கு  வங்கம், கேரளா, தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.

எதிர்க்கட்சியினர் மனு:

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக எம்பி டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி   டெரிக் ஓ பிரையன், சமாஜ்வாடி தலைவர் ராம் கோபால் யாதவ், ஜெஎல்எஸ் கட்சி தலைவர் சரத் யாதவ் உட்பட 11 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி

கோரிக்கை மனு கொடுத்தனர்.

உச்சநீதிமன்றம் மறுப்பு:

இதற்கிடையே, குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிக்கட்சிகள், வி.சி.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்கள் தொடர்பாக மத்திய  அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து, வருகின்ற ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்லாமிய இயக்க தலைவர் இமாம் கருத்து:

இந்நிலையில், குடியுரிமை சட்டம் மற்றும் இதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து இஸ்லாமிய இயக்க தலைவர் ஷாஹி இமாம் சையது அகமது புஹாரி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், போராடுவது இந்திய மக்களின்  ஜனநாயக உரிமை. போராடுவதை யாரும் தடுக்க முடியாது. அதே சமயம், அது கட்டுக்குள் இருக்க வேண்டியதும், உணர்வுகள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதும் முக்கியம் என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவிற்கும் வித்தியாசம் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவு சட்டமாக்கப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த முஸ்லீம்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியாது. இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது என்று  தெரிவித்துள்ளார்.

Related Stories: