போராட்ட களமான தமிழகம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...கைது நடவடிக்கையில் காவல்துறை

சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை  அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் உள்ளிட்ட 60 மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமை சட்டத்திற்கு  தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, பல்கலைக்கழகத்திற்கு வரும் 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் சென்னை புதுக்கல்லூரி, திருச்சி தூய வளனார் கல்லூரி மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை காயிதே மில்லத் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார்  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவிருந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: