நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு: மதியம் 1 மணிக்கு தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: அக்சய் குமார் சிங் சீராய்வு மனு மீது மதியம் 1 மணிக்கு தீர்ப்பு அறிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளனர்.

நிர்பயா பலாத்கார வழக்கு:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல்   உயிரிழந்தார். மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும்   பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மரண தண்டனை:

வழக்கில் தொடர்புடைவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய்   சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.

உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு:

இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் வழக்கில் 4-வது   குற்றவாளியான அக்சய்குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த  மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில்   மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

புதிய அமர்வு அமைப்பு:

இந்த இரு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து   தான் விலகிக் கொள்வதாகத் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கில் இருந்து விலகியதையடுத்து, அக்சய் குமார் சிங் சீராய்வு மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

1 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

இந்நிலையில், அக்சய் குமார் சிங் சீராய்வு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பல்வேறு உண்மைகளை முன்  வைக்க விரும்புகிறேன், நிர்பயா வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஊடகங்கள் மற்றும் பொதுக்கருத்தின் நெருக்குதலால் அக்சய்குமார் சிங்குக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்பயாவின் நண்பர் பல லட்சம் ரூபாய் பெற்றதாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் வாதாடினார்.  இந்த வழக்கில் அக்ஷய் குமார் சிங்  சிக்க வைக்கப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை கோரப்பட்டது. ஆனால், சிபிஐ விசாரணை நடத்தப்படவில்லை. ராம் சிங்கின் தற்கொலை குறித்த புத்தகம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று வாதிட்டார்.

இதனையடுத்து, இது தவறான போக்கு, விசாரணை முடிந்த வழக்கு குறித்து சந்தேகங்களைக் கொண்டு புத்தகம் எழுதுவதா? நீதிபதி அசோக் பூஷண் கேள்வி எழுப்பினார். நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மனித  சமுதாயத்துக்கு எதிரான குற்றமாகும், குற்றவாளிகளுக்கு மன்னிப்பே வழங்கக்‌கூடாது என்று அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அக்சய் குமார் சிங் சீராய்வு மனு மீது மதியம் 1  மணிக்கு தீர்ப்பு அறிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: