குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: அணி திரண்ட எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை!

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சீபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு தி.மு.க. கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அனைத்தக் கட்சி கூட்டத்தில், துரைமுருகன், வைகோ, கேவி தங்கபாலு, காதர் முஹைதீன், திருமாவளவன், ரவிக்குமார், ஈஸ்வரன், ஜி ராமகிருஷ்ணன் ஆகிய தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் குடியுரிமைய திருத்த சட்டத்தின் சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: