டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: மேல்வரி விதிக்க மத்திய அரசு திட்டம்?

டெல்லி: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 38வது கூட்டம் தொடங்கியது. ஜிஎஸ்டி வரி முறையை மத்திய அரசு கொண்டு வந்தபின் பெரிய அளவில் வரி வருவாய் குவியவில்லை.  மாநிலங்களுக்கும் வரி வருவாய் பங்கீடு கிடைக்கவில்லை. இதனால் மாநிலங்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான். ஏற்கனவே இருந்த வரிமுறைகள் மூலம் வருவாய் கணிசமாக கிடைத்து வந்த நிலையில், இப்போது இழப்பு தான் அதிகம் என்று  வெளிப்படையாக மத்திய அரசிடம் முறையிட்டு வந்தன. அடுத்தடுத்த கூட்டங்களில் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிகள்  குறைக்கப்பட்டு வந்தன. மாநிலங்களின் கோரிக்கைகளின் படியும் இந்த வரிகள் குறைக்கப்பட்டன.

ஆனால், இப்போது  வரி வருவாய் போதுமான அளவில் வராமல் கையை கடிப்பதால் பல மாநில அரசுகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. ஒரு பக்கம் நிர்வாக நடைமுறைகளால் வரிகளை முழுமையாக வசூலிக்க முடியாமல் அரசு திணறுகிறது. இன்னொரு பக்கம், பல வர்த்தகர்கள் வரியை சரியாக கணக்கு காட்டுவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி கணக்கு  முறையாக தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், வரி வருவாய் அதிகரிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு பின் கடந்த மாதம் தான் குறிப்பிட்ட இலக்குக்கு நெருக்கமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி  வசூலானது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாநிலங்களுக்கு பங்கீடு அளிக்க இந்த வரி வருவாய் போதுமானதாக இல்லை இதனால், வரியை மீண்டும் அதிகரிக்கலாம் என்று யோசித்து, உயர் அதிகாரிகள் குழுவை கவுன்சில் அமைத்தது. இந்த குழு  தன் அறிக்கையை அளித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில அரசுகளின் இழப்பீட்டுக்காக சில பொருட்கள் மீது மேல்வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிகரெட்  உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆட்டோமொபைல், நிலக்கரி போன்ற பொருட்கள் மீது லெவி விதிக்கப்படலாம். மாநில அரசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கவும் அரசு  திட்டமிட்டுள்ளது.

5 சதவீதம் வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு இனி 8 முதல் 10 சதவீதம் வரி விதிக்கலாம்; 10 சதவீத வரி அடுக்கை எடுத்து விட்டு, 12  முதல் 18 சதவீதம் வரை உயர்த்தலாம்; அதிகபட்சம் 20 சதவீதம் விதிக்கலாம் என்று கமிட்டி  கூறியுள்ளதாக தெரிகிறது. வரி குறைக்கப்பட்ட பல முக்கிய, அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் வரி உயரலாம் என்று தெரிகிறது. கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் துணை  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: