அழகு நிலையத்தில் புகுந்து கத்தி முனையில் மிரட்டி 10 சவரன் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது

சென்னை: கொடுங்கையூர் எத்திராஜ் சாலையில் அழகு நிலையம் வைத்திருப்பவர் காஞ்சனா (42). இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 10 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தண்டையார்பேட்டையை சேர்ந்த நாகராஜ் (29), ராயபுரம் பகுதியை சேர்ந்த டேவிட் ராஜ் (35), மைக்கேல்ராஜ் (33) ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

* வேளச்சேரி தண்டீஸ்வரன் நகர் பாரதி தெருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தேவராஜன் (28) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த மடிக்கணினி, எல்இடி டி.வி, செல்போன், பீரோவில் வைத்திருந்த பணம், 2 சவரன் நகை ஆகியவற்றை ெகாள்ளையடித்து சென்றனர்.

*  வியாசர்பாடி பாலகிருஷ்ணா தெருவை சேர்ந்த பெயின்டர் ராஜா (46) என்பவர், குடும்ப தகராறில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*  செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆட்டோவில் கஞ்சா விற்ற கண்ணகி நகரை சேர்ந்த வீரமருது (எ) தினேஷ் (28), பெரும்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (25), சந்தோஷ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் 7 பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர்.

* புரசைவாக்கம் வெள்ளாள தெருவை சேர்ந்த அருள்ஜோதி (38), நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், இவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

* சென்னை அக்ரஹாரம் கச்சாலீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவதாஸ் (37) என்பவர், நேற்று அதிகாலை குறளகம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கியபோது, அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

* மயிலாப்பூரை சேர்ந்த லட்சுமி (40), நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் 2வது தெரு வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், லட்சுமியை தாக்கி, அவர் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

* தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் (48), தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

கஞ்சா விற்ற மாணவன் கைது

பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தேனியை சேர்ந்த கல்லுாரி மாணவன் பிரவீன்குமார் (22), மதுரையை சேர்ந்த முகமது அன்சார் (20) ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: