அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வுகள் வருகின்ற 23ம் தேதியோடு நிறைவுபெறும் சூழலில், தற்போது நடந்து முடிந்துள்ள அந்த தேர்வுகளுக்கு மட்டும் விடைத்தாள்களை திருத்தும் பணியானது அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விடைத்தாள்களை திருத்தம் செய்யும் போது ஆசிரியர்கள் கவனக்குறைவுடனோ அல்லது சரியாக மதிப்பீடு செய்யாவிட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, தேர்வு முடிவு பெற்ற உடனே விடைத்தாள்களை சரியாக மதிப்பிட்டு மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதே சமயத்தில் மாணவர்களுக்கு சரியான மதிப்பெண்களை பாடத்தை சார்ந்த ஆசிரியர் கொடுத்துள்ளாரா? என்பதை சரிபார்க்கவும், விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் அல்லாமல் மாற்று ஆசிரியரை கொண்டு அந்த மதிப்பெண்கள் சரியான முறையில் மதிப்பிடப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மதிப்பெண்களும் மறு கூட்டலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் அரையாண்டு தேர்வு என்பது முழு ஆண்டுக்கான ஒரு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது. எனவே மாணவர்களின் விடைத்தாள்களை சரியான முறையிலேயே மதிப்பீடு செய்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவ்வாறு ஆசிரியர்கள் யாரேனும் சரியான முறையில் மதிப்பீடு செய்யாமல் இருப்பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, விடைத்தாள்களை அந்த மாவட்டத்தின் மூலமாக கொடுக்கக் கூடிய விடைக்குறிப்புகளை கொண்டு தான் திருத்த வேண்டும். தாமாக மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க கூடாது. பள்ளிக்கல்வித்துறை தேர்வு வாரியம் என்ன மதிப்பெண்களை அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதோ அந்த அடிப்படையிலேயே மதிப்பெண்களை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: