ஆப்பிரிக்காவில் 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்குக் கப்பல் கடத்தல்: நைஜீரிய அரசுடன் இணைந்து, ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட இந்தியா முடிவு

டெல்லி: ஆப்பிரிக்காவின் மேற்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எம்.டி., டியூக் என்ற இந்திய வர்த்தக கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த, 20 இந்திய ஊழியர்களை, கொள்ளையர்கள் கடத்தி சென்றதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 15ம் தேதி ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் நைஜீரிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த எம்.டி. டியூக் ((MT Duke)) என்ற சரக்குக் கப்பல் ஒன்றை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

அப்போது அதில் பயணித்த 20 இந்திய மாலுமிகள் அதனுடன் சேர்ந்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கப்பல் கடத்தப்பட்டதை நைஜீரிய அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கவலை தெரிவித்தார். கடத்தப்பட்ட மாலுமிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். நைஜீரிய அரசுடன் இணைந்து, ஊழியர்களை மீட்கும் பணியில், இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஹாங்காங்கில் இருந்து சென்ற கப்பல் ஒன்று கடத்தப்பட்டதும், அதில் சிக்கிய 18 இந்திய மாலுமிகள் இன்னமும் மீட்கப்படாத நிலையில் மீண்டும் நடந்துள்ள கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: