குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம்: கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை..படுகாயமடைந்தவர்கள் ஐ.சி.யு.வில் அனுமதி!

புதுடெல்லி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தின்போது காவல்துறை தாக்கியதில் படுகாயடைந்த மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் முடிந்த போராட்டம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர்.

மாணவர்கள் விடுதலை

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸாரின் அத்துமீறலைக் கண்டித்து டெல்லி போலீஸ் தலைமையகம் முன்பாக நள்ளிரவில் கூடிய நூற்றுக்கணக்கானோர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதுமட்டுமல்லாது, இந்த விவகாரத்தில், போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து டெல்லி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் மௌலானா ஆசாத் உருது பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி உள்ளிட்டவைகளைச் சேர்ந்த மாணவர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

இதற்கிடையில், கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும் டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாது, மாலை 3 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஆணையம், தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியது. இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட மாணவர்களைப் போலீசார் அதிகாலையில் விடுதலை செய்தனர். இது, தங்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றபடி, மாணவர்கள் அதிகாலையில் கலைந்துசெல்லத் தொடங்கினர்.

ஐசியுவில் அனுமதி

இந்த நிலையில், காவல்துறை தாக்கியதில் படுகாயடைந்த டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஹோலி பேமிலி மருத்துவமனையில் மேலும் 11 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஊர் திரும்பும் மாணவர்கள்

மேலும், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது சொந்த ஊறுகளுக்கு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக ஜாமியா பல்கலைக்கழகம் ஜனவரி 5ம் தேதி வரை மூடப்பட்டதால் விடுதியில் இருந்து மாணவர்கள் தங்கது சொந்த ஊர்களுக்கும் செல்கின்றனர். மேலும், விடுமுறைக்குப் பின் தேர்வுகள் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: