கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது: 26 யானைகள் பங்கேற்பு

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. இதில் 26 கோயில் யானைகள் பங்கேற்றன.இந்து அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம்,  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நேற்று காலை தொடங்கியது. முகாமுக்கான செலவாக தமிழக அரசு ₹1.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, 6 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகை, யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை, குளியல் மேடை  உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமுக்குள் காட்டு யானைகள் நுழைந்துவிடும் என்பதால் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாமை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாம் 48 நாட்கள் நடக்கிறது.

முகாமில் பங்கேற்பதற்காக, தமிழகம் முழுவதும் இருந்து 26 யானைகள் வந்துள்ளன. முதலாவதாக, வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமாலியதாவும், 2-வதாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் கோயில் யானை கோதையும், 3-வதாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரியும் வந்தன. இதன்படி, அடுத்தது 26 யானைகள் வந்து சேர்ந்தன. நேற்று காலை யானைகள், பவானி ஆற்றில் குளிக்கவைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை முதன்மை ஆணையர் பனீந்தரரெட்டி பங்கேற்று யானைகள் புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.2 யானைகள் இன்று வருகை: புத்துணர்வு முகாமில் 28 யானைகள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று வரையில் 26 யானைகள் வந்தன. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தர்பாரண்யேஸ்வரர் கோயிலை சேர்ந்த பிருக்ருதி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலை சேர்ந்த லட்சுமி ஆகிய 2 யானைகள் இன்று புத்துணர்வு முகாமில் கலந்து கொள்கிறது.

ஒரே பெயர் கொண்ட 5 யானைகள்

புத்துணர்வு முகாமில் ‘லட்சுமி’ என்ற பெயரில் 5 யானைகள் கலந்து கொண்டுள்ளது. அவை திருவண்ணாமலை யோகராமச்சந்திர சுவாமி கோயில் யானை, திருச்சி தாயுமான சுவாமி கோயில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயில், இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனார் கோயில், புதுச்சேரி மணக்குளவிநாயகர் கோயில் யானைகள் ஒரே பெயரை கொண்டுள்ளது.

Related Stories: