விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்ம குளம் திறப்பு நடுங்கும் குளிரிலும் நள்ளிரவு பெண்கள் புனிதநீராடி வழிபட்டனர்: தொட்டில் பிள்ளை பிரார்த்தனை காணிக்கை

பள்ளிகொண்டா: வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்ம குளம் திறக்கப்பட்டது. இதில் நடுங்கும் குளிரிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடை(சி) ஞாயிறு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கோயிலில் உள்ள சூளி தீர்த்தம் மற்றும் சோமத் தீர்த்தத்தில் மூழ்கினால் ஆண், பெண் இருபாலருக்கும் பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் அனைத்தும் விலகிவிடும் என்பது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது.

மேலும் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் பாலாறு நீர் மற்றும் கோயிலில் உள்ள பிரம்மதீர்த்தம், சிம்மத்தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களில் நள்ளிரவில் நீராடி கோயிலில் படுத்து உறங்கினால் அவர்களது கனவில் இறைவன் ஒளியாக தோன்றி குழந்தை வரம் கொடுப்பார் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டின் கடைசி ஞாயிறு விழா தெப்பல் உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டு சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில்  எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார்,

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயப்பிரகாசம், உறுப்பினர்கள் வெங்கடேசன், பாலசுந்தரம், ராஜா, உமா மற்றும் ஊர்பொதுமக்கள் உட்பட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோயில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேலூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சிம்ம குளத்தில் புனித நீராடி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். ெதாடர்ந்து கோயில் வளாகத்தில் வேண்டுதல்களுடன் படுத்து உறங்கினர்.

அதேபோல் கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேறியவர்கள் தொட்டில் பிள்ளை பிரார்த்தனை காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்கென போக்குவரத்து துறை சார்பில் வேலூர், குடியாத்தம், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை 6.30 மணிக்கு பிரம்ம குளத்தில் தீர்த்தவாரியும், காலை 9 மணிக்கு விரிஞ்சிபுரத்தில் சிவசர்மாவாக பிறந்த பிரம்ம பாலகனுக்கு உபநயன சிவ தீட்சை வழங்குதல், 9.30 மணிக்கு சுவாமி திருமாட வீதி உலா, பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்,

மாலை 3.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் மகா தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சுவாமி திருவீதி உலா உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு காலசந்தி அபிஷேகம், 11 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெற உள்ளது.

Related Stories: