தொடர் மழையால் மீன்பாடு மந்தம்: தருவைகுளம் ஏலக்கூடம் வெறிச்சோடியது

குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் மீன்பாடு மந்தமானது. இதனால் தருவைகுளம் ஏலக்கூடம் வெறிச்சோடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக குளத்தூர் அடுத்த தருவைகுளம் கடல் பகுதியிலும் கடந்த இருவாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக கடல்  பகுதியில் நீரோட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் (பவுர்ணமி) நிலவு வாரம் என்பதால் மீன்கள் ஆழ்கடலுக்கு சென்றுவிட்டதால் மீன்பாடு மந்தமானது. இதனால் மீனவர்கள் தங்கள் வலையில் பெரிய அளவில் மீன்கள் சிக்காதநிலையில் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

முறல் வகை மீன்களான கருப்பு களிங்கன், பச்சை களிங்கன், வாலமுறல், கன்னமுழி திருக்கை, சின்ன விலாமீன் போன்ற மீன்கள் மட்டும் குறைந்த அளவிலேயே ஏலக்கூடத்திற்கு வரத்து இருந்தது. இவ்வாறு வரத்துகுறைவால் மீன்கள் விலை உயர்ந்தது. முறல் வகை மீன்கள் கிலோ ரூ.220 முதல் 270 வரை ஏலம் போனது. திருக்கை மீன் ரூ.130க்கும், விலா மீன் ரூ150க்கும்  ஏலம் போனது. இதுகுறித்து மீன்வியாபாரி சந்திரசேகரன் கூறுகையில், ‘‘தருவைகுளம் கடல் பகுதியில் இரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடந்த சில தினங்களாக கடலுக்குள் செல்லவில்லை. மேலும் கடலுக்குள் சென்ற ஒரு சில மீனவர்கள், தங்கள் வலைகளில் குறைந்த அளவு சிக்கிய மீன்களுடன் கரை திரும்பினர். இதனிடையே கடலில் பெய்துவரும் தொடர் மழையால் தேங்கிநிற்கும் பாசிகளே வலையில்  சிக்குகின்றன. மழையளவு குறைந்து கடலில் நீரோட்டம் மாறிய பின்னரே மீன்கள் வரத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்’’ என்றார்.

Related Stories: