ஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...!

டெல்லி: ஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். தெலங்கானாவின் ஷம்சாபாத்தில் கால்நடை மருத்துவர் டிஷா கொலை வழக்கிற்கு பிறகு குற்றவாளிகளுக்கு  கடும் தண்டனை விதிக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. அதன்படி குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் 21 நாட்களில் விசாரணை செய்து தூக்கு தண்டனை விதிக்கும் ‘2019 டிஷா’  சட்டம் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றிய முதலமைச்சர்  ஜெகன் மோகன் ரெட்டியின் முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த 3-ம் தேதி முதல் டெல்லி ராஜ்கட் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். உண்ணாவிரதம் இருந்து வரும் சுவாதி மாலிவாலை, டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயாரும் தந்தையும் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஆந்திராவில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில்; பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: