தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் கோரி வழக்கு * பதிவுத்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க புது நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க கோரிய வழக்கில் பதிவுத்துறை விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டம் 2017 ஏப்ரல் 9ம் தேதி நடந்தது. இதில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல பிற நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க கோரி, மாவட்ட பதிவாளருக்கு, நிர்வாகிகள் பட்டியல் 2017 ஏப்ரல் 13ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கடந்தும், சங்க நிர்வாகிகள் தேர்வுக்கு பதிவுத்துறை ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக கூறி, சங்கத்தின் கவுரவ செயற்குழு உறுப்பினர் நாகலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், சங்க கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட போதும், சங்கத்தை நிர்வகிக்க, மாவட்ட பதிவாளர் மனோகரனை சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு காலம் முடிந்தும், நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதமானது. எனவே, நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனு குறித்து விளக்கமளிக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories: