சேலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய வாலிபர் சங்கத்தினர் போலீசார் இடையே கைகலப்பு: ஒருவரை ஒருவர் தாக்கியதால் பரபரப்பு

சேலம்: சேலத்தில் குடியுரிமை சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் வாலிபர் சங்கத்தினர், போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால், கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  மத்திய பாஜ அரசு, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சேலத்தில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரே குடியுரிமை சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்காக சேலம் வடக்கு மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் சதீஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகம் எதிரே திரண்டனர். அவர்கள், கோஷங்கள் எழுப்பியவாறு வந்தனர். அவர்களை டவுன் போலீசார்,  தடுத்து நிறுத்தினர்.  அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், சட்ட திருத்த மசோதா நகலை தீ வைத்து எரித்தனர்.

போலீசார் ஓடிவந்து நகலை பறிக்க முயன்றனர். இதனால், போலீசாருக்கும், வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் கைது செய்து போலீசார் வேனில் ஏற்றினர். இதை முத்து என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அவரை எஸ்ஐ பழனிசாமி மடக்கி பிடித்து தாக்கினார். இதனால், இதர நிர்வாகிகள் ஆத்திரமடைந்து, இன்ஸ்பெக்டர் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வடக்கு மாநகர தலைவர் சதீசை சரமாரியாக தாக்கி வேனில் ஏற்றினர். அப்போது இருதரப்பினரும் சரமாரி தாக்கிக் கொண்டனர். அந்த நேரத்தில் முத்துவை குண்டுகட்டாக வேனில் ஏற்றினர். அவர், தன்னை தாக்கிய போலீசாரை திருப்பி தாக்கினார். இதனால், போலீசார் ஆத்திரத்தில் அவரை சரமாரியாக அடித்தனர். போலீசாருக்கும், வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், அந்த பகுதியே களேபரமானது. பின்னர், அங்கிருந்த மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரும் வாலிபர் சங்கத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி, மோதிக்கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேடிக்கை பார்த்தவர்களை விரட்டி பிடித்தனர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் போராட்டத்தை கலெக்டர் அலுவலக பகுதிக்கு வந்த சில இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் விரட்டி பிடித்தனர். இதில், அங்குள்ள கார் பட்டறைக்கு வந்த வாலிபர்கள் இருவரையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். பின்னர், கார் பட்டறைக்கு உரிமையாளர் வந்து கூறியபின், அவர்களை விடுவித்தனர். ஓரமாக நின்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் பிரவீன்குமாரை, அவரது மகனுடன் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: