90 சதவீத நீர் நிலைகள் மாசடைந்து விட்டன தொடரும் மாசு, தேங்கும் கழிவுகளால் நாளுக்கு நாள் தரம் இழக்கும் தண்ணீர்

சேலம்: ஒரு மனிதன் நீரின்றி 3 அல்லது 5 நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவீதம் மட்டுமே. மீதமிருக்கும் 70 சதவீதமும் நீர்ப்பரப்பாக இருந்தாலும், அதில் 97.5 உப்பு நீராகத்தான் காணப்படுகின்றது. இதில் நிலத்தடிநீர் 2.5 சதவீதம் தான். மீதம்  0.26 சதவீதம் நன்னீர் பரப்பாகும். இந்த நீரைத்தான் உலகில் உள்ள மக்கள் அனைவரும் தேவைக்காக பயன்படுத்துகிறோம் என்று ஆய்வுகள் கூறுகிறது. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் தொகை பெருக்கத்தால் நாளுக்குநாள் நிலத்தடி நீரானது பெருமளவில் உறிஞ்சப்படுகிறது. இதனால் கடல் நீர் உட்புகுந்து நல்ல நீரை உபயோகிக்க இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க தொழிற்சாலை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மக்கள் பயன்படுத்தும் நச்சுப்பொருட்கள் என்று பல்வேறு வழிகளில் நீரின்  தூய்ைம கெடுக்கப்பட்டு, அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், முதலிடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் தமிழகத்தில் 90 சதவீத நீர் நிலைகள் மாசடைந்து காணப்படுகின்றன. இந்த நீர்நிலைகளில் கழிவுநீர், சாயக்கழிவுநீர், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், அதிகளவில் கலக்கிறது. இதன் காரணமாக தண்ணீர் மாசுபட்டு நாளுக்கு நாள், அதன் தரம் குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இந்த நீர்நிலைகளின் தண்ணீர் உபயோகமற்றதாகி விடும் என்பது விவாயிகளின் வேதனை.   இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி கூறியதாவது: தண்ணீரீன் தரம் குறித்து 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 120வது இடம் கிடைத்துள்ளது. அந்த ஆய்வை நடத்தியது நிதி ஆயோக் அமைப்பாகும். நாட்டில் மொத்தம் 60 கோடி மக்கள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் 256 மாவட்டங்களை சேர்ந்த 1600 பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவதாக மத்திய அரசு புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.  

உலகளவில் 2100ம் ஆண்டு ஆயிரம் கோடி மக்கள் தொகையை தாண்டும். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பருவ நிலை மாற்றம், நீர்நிலைகள் மாசு போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகள் நம்நாட்டில் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஆறு, ஏரி, குளம், குட்டைகள் பெருமளவில் மாசடைந்துள்ளன. நமக்கு தேவையான தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும். வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகளை இங்கு நடத்த அனுமதிக்கக்கூடாது. இதேபோன்ற நடவடிக்கைகளால் 50 சதவீத நீர்நிலைகளை பாதுகாக்கலாம். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

40% பேருக்கு தண்ணீர் பற்றாக்குறை

தற்போதைய காலகட்டத்தில் 80 நாடுகளில் வாழும் 110 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 40 சதவீதம்  பேருக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. 2050ம் ஆண்டு வாக்கில் நீருக்காக  பெரும் சவால்களை சந்திக்க ேநரிடும். எதிர்காலத்தில் தண்ணீருக்கான விலை, பெட்ரோலின் விலையை விட  அதிகரிக்கலாம் என்றும் சமீபத்தில் நடந்த சர்வதேச விழிப்புணர்வு  மாநாட்டில், விஞ்ஞானிகள்  சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாசுபட்ட நீரால் பரவும் நோய்கள்

டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ் போன்றவை, கொக்கி புழுக்கள் உள்ள மாசுபட்ட நீரால் ஏற்படும் நோய்களாகும். மாசுபட்ட கடல் நீரால் தோல் நோய்கள், காதுவலி, கண்கள் சிவந்து போகுதல், மூச்சு திணறல் நோய்கள், மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். மாசுபட்ட நீரீல் வளரும் மீன்களை உணவில் சேர்த்து கொண்டால் பாதிப்பு ஏற்படும். மாசுபட்ட நீரில் வளர்ந்த காய்கறிகளை சமைத்து உண்டாலும் நோய் பாதிப்புகள் உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Related Stories: