நாகூர் பட்டினசேரி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் வீடுகள், தென்னை மரங்கள் பாதிப்பு: கருங்கல் தடுப்புசுவர் அமைக்க கோரிக்கை

நாகை:  நாகூர் அருகே கடலில் அரிப்பு ஏற்படுவதால் மீனவர்களின் வீடுகள் மற்றும் தென்னை மரங்கள் கடலுக்குள் இழுத்து செல்வதை தடுக்க கருங்கல் தடுப்புசுவர் அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் நாகூருக்கும் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூருக்கும் இடையே அமைந்துள்ளது பட்டினச்சேரி மீனவ கிராமம். வாஞ்சூரில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பட்டினச்சேரி கிராமத்தின் உள்ளே கடல்நீர் புகுவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அதிக அளவிலான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலையின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பட்டினச்சேரி கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் கடல் சீற்றத்தின்போது அதிக அளவிலான கடல் நீர் உட்புகுந்து இதுவரை கரையோரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் கடல் அரிப்பானது சுனாமிக்கு பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் எஞ்சியுள்ள தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து அழிந்து வருகின்றது. கடல் அரிப்புக்கும் பாதிப்புக்கும் முக்கிய காரணம் அருகில் உள்ள காரைக்கால் தனியார் துறைமுகம். அப்பகுதி மீனவர்கள், துறைமுகத்தின் வளர்ச்சிக்காக ஒரு பகுதியில் கருங்கல் கொட்டப்பட்டதால் மறு பகுதியில் 300 மீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்து கடலரிப்பு அதிகரித்து விட்டது. இதனால் படகுகளை நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மீன்பிடி தொழில் செய்ய முடியாமலும் தவித்து வருகிறோம்.

கடல் அரிப்பினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை. எனவே எஞ்சியுள்ள வீடுகளுக்குள்ளும் கடல் தண்ணீர் உள்ளே செல்வதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கடல் அரிப்பில் இருந்து மீனவர்களை பாதுகாக்க முகத்துவாரத்தின் இரண்டு புறமும் கருங்கற்கள் கொட்டி தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கமுடியும் என்று கூறினர்.   

Related Stories: