625 கோடி வட்டி மானிய திட்டத்தில் சிறு தொழில்களுக்கு கிடைத்தது 40 கோடிதான்: ஏகப்பட்ட கெடுபிடிகளால் தொழில்துறையினர் ஏமாற்றம்

*  மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது 625 கோடி.

* மானிய பலன் கிடைத்தது வெறும் 40 கோடி.

* ஜிஎஸ்டி பதிவு இருந்தால்தான் விண்ணப்பிக்க முடியும்.

* கெடுபிடி விதிகளால் தொழில்துறையினர் குமுறல்.

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்த வட்டி மானிய திட்டத்தில், சிறு தொழில்துறையினர் சொற்ப பலன்களைத்தான் பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.  பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியால் தொழில் துறைகள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக, சிறு தொழில்கள் அடியோடு நசித்தன. பலர் கடையை மூடிவிட்டு கூலி வேலைக்கு போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இந்த சூழ்நிலையில், குறு, சிறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க வட்டி மானிய திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது. இதற்காக, கடந்த நிதியாண்டில் 275 கோடியும், நடப்பு ஆண்டில் ₹350 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.  பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானபோதே, ₹40 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வர்த்தகம் செய்யும் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத தொழில் துறைகளுக்கும் இந்த திட்டத்தில் பலன் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக சொற்ப பலனைத்தான் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்த 2 சதவீத கடன் வட்டி மானிய திட்டத்தில்  சுமார் ₹30 கோடி முதல் 40 கோடி வரைதான் பலன் பெற்றுள்ளனர்.  இதனால், சிறுதொழில் செய்வோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த துறையினருக்கு பெரிய நிறுவனங்கள் தர வேண்டிய பாக்கி சுமார் ₹40,000 கோடி உள்ளது. இந்த பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த பிறகும், நிலுவை தொகையை வாங்குவது கடினமாக உள்ளது என சிறு தொழி்ல் செய்வோர் பலர் தெரிவிக்கின்றனர்.  நிலுவை இருப்பதால் கடனை திருப்பி செலுத்துவதும், புதிய கடன்கள் பெறுவதும் சிலருக்கு சிக்கலாகி விடுகிறது. இதுபோல், சிலர் மட்டுமே வட்டி மானிய திட்டத்தில் பலன் பெறுவதற்கு, திட்டத்தில் உள்ள கெடுபிடிகள்தான் காரணம் என தொழில்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது ஜிஎஸ்டிஎன் நம்பர், உத்யோக் ஆதார் எண் வழங்கினால்தான் திட்ட பலனை பெற முடியும். ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். ஆனால், கடன்கள் நவம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை பெற்றவர்கள்தான் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இதுபோல், நிறுவனங்கள் இதேபோன்ற வேறு அரசு திட்டத்தில் பலன் பெற்றிருந்தால் வட்டி மானியம் பெற முடியாது.  இதுபோன்ற கெடுபிடிகள் காரணமாக சொற்ப பேர் மட்டுமே பலன் பெற்றுள்ளனர். பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில் மத்திய அரசு விதிகளை தளர்த்த வேண்டும். இல்லாவிட்டால், பல தொழில் நிறுவனங்களை மூட வேண்டியதுதான் என தொழில்துறையினர் வேதனையுடன் கூறினர்.

Related Stories: