தமிழகம் முழுவதும் பதுக்கல் கள்ள மார்க்கெட்டில் உரங்கள் விற்பனை: அதிகாரிகள் ஆசியோடு’ நடந்து வரும் அவலம் ,..அதிக விலை கொடுத்து வாங்கும் விவசாயிகள்

*சிறப்பு செய்தி

தமிழகத்தில் அனைவரும் வெங்காயம் விலை உயர்வை மட்டுமே கவனித்துக் கொண்டுள்ள நிலையில், சத்தமில்லாமல் உரங்கள் பதுக்கப்பட்டு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறை அதிகாரிகளின் உதவியுடன் கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் ஜிப்சம் உரங்களை வழங்குகிறது. அதேபோல் விவசாயம் என்றாலே யூரியா இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. தற்போது மாநிலத்தில் உரங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வேளாண்மைத்துறை அதிகாரிகளின் உதவியுடன் உரங்களை பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்கி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

  இதுகுறித்து தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உரக்கடைகளில் தேவையான அளவு முழு உரங்களையும் இருப்பு வைக்க முடியாது. எனவே கடையை ஒரு இடத்தில் நடத்திக்கொண்டு உரங்களை இருப்பு வைக்க, ‘பப்பர் குடோன்’ என சிலர் அனுமதி பெற்றுக்கொள்கின்றனர். அனுமதி கொடுக்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கே இந்த ‘பப்பர் குடோன்’ எங்குள்ளது என்பது தெரியாது. அப்படி ‘பரம ரகசியமான’ இடத்தில் உரங்களை பதுக்கிக் கொள்கின்றனர். இங்கு பதுக்கப்படும் உரங்களில் யூரியா முதல் இடத்தை பெற்றுக்கொள்கிறது. இரண்டாவதாக ‘மிக்ஸர் யூனிட்’ அமைக்க வேளாண்மைத்துறை அனுமதி வழங்குகிறது. இந்த மிக்சர் யூனிட்டில் கலப்பு உரங்கள் தயாரிக்கப்படுகிறது. அதாவது மக்கும் குப்பைகள், கரிக்கட்டை, யூரியா, ஜிப்சம் மற்றும் சிலவற்றை அரைத்து வெவ்வேறு சதவீதங்களில் கலந்து விற்பனை செய்வது தான் ‘மிக்ஸர் யூனிட்’. இந்த மிக்ஸர் யூனிட் பெரும்பாலும் வேளாண்மை இணை இயக்குனர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

இந்த மிக்ஸர் யூனிட்டில் கலப்படம் செய்ய தேவையான ஜிப்சம் உரத்தை வேளாண்மைத்துறையே வழங்குகிறது. அதாவது விவசாயிகளுக்கு வழங்க இருப்பு வைக்கப்பட்டிருந்த உரங்களை இந்த மிக்ஸர் யூனிட்டிற்கு வழங்குகின்றனர். தவிர மாநிலத்தில் பெரும்பாலான உரக்கடைகளில் உரங்களை பிஓஎஸ் இயந்திரத்தில் பதிவு செய்த பின்னரே விற்க வேண்டும். ஆனால் உரக்கடையினர் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் ஆதார் எண்களை பெற்றுக்கொண்டு தேவைக்கு ஏற்ப பதிவு செய்து மானியத்தை கொள்ளை அடிக்கின்றனர். அரசு மானியம் விவசாயிகளுக்கு சென்று சேர வாய்ப்பு கொடுப்பதில்லை. மேலும், ஒவ்வொரு கடையிலும் எந்தெந்த உரங்கள் எவ்வளவு உள்ளன. என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்று போர்டு வைக்க வேண்டும். ஆனால் தேனி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள உரக்கடைகளில் இப்படி போர்டு வைப்பதில்லை.

குறிப்பாக, தேனி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு வழங்கும் மானியமும், உரங்களும் மாற்று வழிகள் மூலம் கேரள எஸ்டேட்களுக்கு செல்கிறது. மற்ற மாவட்டங்களில் அனுமதியின்றி கிராமங்களில் நடத்தப்படும் சிறிய உரக்கடைகள் மூலம் கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இதனை கண்டுகொள்ள வேண்டிய, கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மாநிலம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்தாலும் வேளாண்மைத்துறை அதிகாரிகளின் உதவியுடன் உரங்கள் பதுக்கப்பட்டு கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் அப்பாவி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தெரிவித்தனர்.

ஜவ்வாதுமலை பகுதியில்  10 டன் உரம் பறிமுதல்  

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை தாலுகாவில் 300க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் தாலுகா தலைமையிடமான ஜமுனாமரத்தூருக்கு வந்து பொருள் வாங்க வேண்டும். ஜமுனாமரத்தூரை சேர்ந்த தண்டபாணி(40) என்பவர் ஜவுளி, எலக்ட்ரிக்கல், இரும்பு, பெயின்ட் கடைகளை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே ஒரு குடோனில் உரிமம் பெறாமல் உரமூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இதேபோல், அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் கமால்பாஷா(45) என்பவரும் ஒரு குடோனில் உரமூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். ரகசியதகவல் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட இணை இயக்குனர் ம.முருகன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழுவினர் நேற்று 2 குடோனில் அதிரடி சோதனை செய்து 2 குடோனிலும் பதுக்கி வைத்திருந்த 10 மெட்ரிக் டன் உரமூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>