திருவண்ணாமலையில் தீபவிழா நிறைவு: தெப்பலில் சந்திரசேகரர் பவனி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவத்தின் முதல்நாளான நேற்றிரவு சந்திரசேகரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ம் நாளான நேற்றுமுன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் முடிந்ததும், 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதையொட்டி, ஐயங்குளத்தைச் சுற்றிலும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். 2ம் நாள் தெப்பல் உற்சவமான இன்று இரவு, ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.

Related Stories: