நாகையில் மருத்துவக்கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி முழு கடையடைப்பு போராட்டம்

நாகை: நாகையில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி வணிகர்களின் 24 மணி நேர முழு கடையடைப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. நாகையில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்நிலையில் இந்த கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதனால் திட்டமிட்டபடி நாகையில் மருத்துவக் கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி இந்த கடையடைப்பு நடைபெறுகிறது. நாளை காலை 6 மணி வரை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், வாடகை வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களும் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஆறுகாட்டுத்துறை தொடங்கி, நாகூர் வரையிலான 25க்கும் மேற்பட்ட கிராம மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது,  மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியை உடனே துவங்க வேண்டும் என்பது எங்களின் ஒற்றை கோரிக்கை. இதற்காக இந்திய வர்த்தக தொழில் குழுமம், அனைத்து வணிகர் சங்கங்கள், அனைத்து சேவை சங்கங்கள், மீனவர்கள், பஞ்சாயத்தார்கள் மற்றும் அனைத்து மக்கள் ஆகியோர் ஒன்று திரண்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி பணியை துவங்கி இங்குள்ள மக்களின் கனவை நினைவாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: