உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு: 15-ல் 8 இடங்கள் பெண்களுக்கும், 6 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இடஒதுக்கீடு  முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த மாநில  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், விதிமுறைகளை பின்பற்றியே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாகவும், திமுக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. நேற்று தமிழக காங். தரப்பில் தாக்கல் செய்த  மனுவில், ‘பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் அதை செய்யாமல் தேர்தல் நடத்துகிறார்கள். இதனால் அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். வார்டு வரையறை,  இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னர் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலோடு சேர்ந்து தேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இன்று, இவ்வழக்கை விசாரித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.  தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் தரப்பிலும் காரசாரமான வாதங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு அறிவித்த உத்தரவில், ‘அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அட்டவணை அறிவிக்கையை ரத்து செய்ய முடியாது. 2011ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் வார்டு மறுவரையறை  செய்து தேர்தலை நடத்த வேண்டும். அதனை மறுவரையறை ஆணையம் கண்காணிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம். புதிதாக உருவாக்கப்பட்ட  மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பாக, 4 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது 3 மாதத்திற்குள் மறுவரையறை முடித்து அந்த மாவட்டங்களுக்கும் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று, அந்த  தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை,  ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மாநகராட்சி பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி பட்டியலினத்தவர்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை,  ஆவடி, திருப்பூர், தஞ்சை, சேலம், ஓசூர் ஆகிய மாநகராட்சி மேயர்பதவிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: