மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு: ஏற்றுமதி நிறுவனங்கள் முயற்சி

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் பங்களிப்புடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் நிறுவனங்களில் தென் மாவட்டம், வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து வேலை பார்க்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்படுவதால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் வருகையால் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வெளியூர் நபர்களாக உள்ளனர். குடியிருப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் ஆண்டுக்கு ஒருமுறை வீட்டு வாடகை உயர்த்துகின்றனர்.

Advertising
Advertising

இதனால், தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் வீட்டு வாடகைக்கு போகிறது. குழந்தைகளின் கல்விச்செலவு, மருத்துவ செலவு, மளிகைச்செலவு, போக்குவரத்து செலவு உட்பட பண்டிகை கால செலவுகள் என நாளுக்கு நாள் செலவினங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால், பலர் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கே திரும்புகின்றனர். இதை தவிர்க்கும் விதமாகவும், தொழிலாளர்களை நிரந்தரமாக தக்க வைக்க குடும்பத்துடன் தங்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க மத்திய, மாநில அரசுகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தொழிற்சங்கங்கள், பின்னலாடை நிறுவனங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான முயற்சியில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் யாரும் தீவிரம் காட்டவில்லை. திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு தொழிலாளர்களின் பங்கு முக்கியத்துவமாக உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தற்போது அதிகளவு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்க வருகின்றனர். தென் மாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்களை பிரித்து திருப்பூரில் தங்கி வேலைபார்க்கின்றனர். இவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை பார்க்க அடிக்கடி ஊருக்கு செல்வதால் உற்பத்தி பாதிக்கிறது.

இதை தவிர்க்கும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் நிர்வாக குழு சார்பில் பல்வேறு பகுதிகளில் இடங்களை வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி குறைவான வாடகைக்கு விடவும், தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அவர்களுடைய பெயரில் மத்திய அரசு வழங்கும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீடுகள் கட்டி கிரையம் செய்துகொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு ஆகிய பகுதிகளில் இடம் வாங்க முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் முயற்சிக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இது குறித்து சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறுகையில், ‘‘தென்மாவட்டம், வடமாநில தொழிலாளர்கள் நலன் கருதி பாதுகாப்பான சொந்தவீட்டில் வசிக்கும் திட்டத்தில், அடுத்த ஆறு ஆண்டுகளில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, 500 வீடுகள் கட்டும் திட்டம், மார்ச் மாதம் துவங்கப்படும். அரசு மானியத்துடன், ஒரு பெட்ரூம் மற்றும் இரண்டு பெட்ரூம் வசதியுடன், அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும். முதல் கட்டமாக, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு பகுதியில், இடம் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்து, முக்கிய ரோடுகள் மார்க்கத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும்,’’ என்றார்.

Related Stories: