தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

நேபாள்: நேபாளத்தில் நடைபெற்றுவந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி, நேபாளத்தின் காத்மண்டு, போக்காரா நகரங்களில் கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வந்தது. ஏழு நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளிக் குவித்தனர். குத்துச்சண்டையில் இந்தியா 12 தங்கம் உள்பட16 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 6 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். மகளிர் மற்றும் ஆடவர் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஸ்குவாஷ் மகளிர் போட்டியில் இந்தியாவிற்கு தங்கமும், ஆடவர் போட்டியில் வெள்ளியும் கிடைத்தது. 10 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியின் முடிவில், இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என 312 பதக்கங்களை வென்றுள்ளது. 1984ல் தெற்காசிய போட்டிகள் தொடங்கியதில் இருந்து பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகித்த போதிலும், தற்போதுதான் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, காட்மாண்டு தசரத் மைதானத்தில் நடைபெற்ற நிறைவுவிழா நிகழ்ச்சியில் வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அங்கு திரண்டிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. கண்கவர் வாணவேடிக்கைகளுடன் தெற்காசியப் போட்டி நிறைவடைந்தது. அடுத்த முறை போட்டி நடைபெற உள்ள பாகிஸ்தானிடம் தெற்காசிய விளையாட்டு கொடி ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>