காஞ்சிபுரம் அருகே புதிய சர்வதேச விமான நிலையம்... பரந்தூரில் விமான நிலையம் கட்ட 4700 ஏக்கர் தேர்வு

காஞ்சிபுரம்: சென்னையில் இருந்து சுமார் 70 கி.மி தொலைவில் காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை திரிசூலத்தில் தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையம் நெரிசல் மிகுந்ததாக இருப்பதால் புதிய விமான நிலையத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த இந்த இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ள கேட் எனப்படும் பொன்னேரி கரையில் இருந்து சுமார் 10 கி.மி தொலைவில் பரந்தூர் கிராமம் அமைந்துள்ளது.

இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 12 கிராமங்களில் 4700 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50% இடம் தமிழ்நாடு அரசு கை வசம் இருக்கிறது. எஞ்சிய 50% இடம் கிராமமக்களிடம் இருந்து அரசு கைப்பற்ற வேண்டியுள்ளது. இந்த இடத்தை கைப்பற்றுவது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. புதிய விமான நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இந்திய விமான நிலைய கட்டுப்பட்டு அதிகாரிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும் தமிழக அதிகாரிகள் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் மற்றும் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஆகியே இரண்டு இடங்களை தேர்வு செய்து இந்திய விமான நிலைய கட்டுப்பட்டு துறைக்கு அனுப்பிவைத்தனர். அதில் பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. காஞ்சிபுரத்தில் இருந்து பரந்தூர் 16 கி.மி தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 24 கி.மி தொலைவிலும் அமைந்துள்ளது. பரந்தூர் அருகே திருமால்பூர், தக்கோலம் போன்ற ஊர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: