5 வயது சிறுமியை பலாத்காரம் : செய்து கல்லால் அடித்து படுகொலை: கொடூர குற்றவாளி கைது

நாக்பூர்: 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் கம்லேஷ்வர் தாலுகாவில் உள்ள லிங்கா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் கடந்த 6ம் தேதியன்று திடீரென காணாமல் போனாள். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் லிங்கா கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் சிறுமி பிணமாக கிடந்தாள். அவளது தலை கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுமியின் இந்த படுகொலையை கண்டித்து நேற்று கம்லேஷ்வர் தாலுகாவில் பந்த் கடைபிடிக்கப்பட்டது.

இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கண்டனப் பேரணி நடத்தினர். இந்த நிலையில், சஞ்சய் புரி(32) என்பவனை நேற்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவன் குற்றத்தை ஒப்புக் கொண் டதாக நாக்பூர் ரூரல் போலீஸ் கண்காணிப்பாளர் ராகேஷ் ஒலா கூறினார். கம்லேஷ்வர் தாலுகாவில் உள்ள மொகாவ் என்ற ஊரைச் சேர்ந்த சஞ்சய் புரி, கடந்த 6ம் தேதியன்று சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த பிறகு சிறுமியின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறான். அவன் மீது இ.பி.கோ. 376 (பலாத்காரம்), 363 (ஆள்கடத்தல்), 302 (கொலை), போக்சோ சட்டப்பிரிவு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் புரியை டிசம்பர் 13ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

>