வெங்காயம் விளைச்சல் வீழ்ச்சிக்கு மரபணு மாற்று விதையே காரணம்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குற்றச்சாட்டு

ஒட்டன்சத்திரம்: வெங்காய விளைச்சல் வீழ்ச்சிக்கு மரபணு மாற்று விதைகளே காரணம் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காயம் மற்றும் கண்வலி கிழங்கு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளை நேற்று பார்வையிட்ட தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியா முழுவதும் வெங்காயம் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து, விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்த விவசாயிகள் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரிய நாட்டு வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் 75 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்து நல்ல மகசூல் பெற்றுள்ளனர்.

இதனை நீண்ட நாள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடிகிறது.ஆனால் பெரும்பகுதி விவசாயிகளிடம் மகசூல் பெருக்கம் என்ற பெயரில் 150 நாள் வயதுடைய இருப்பு வைக்க இயலாத வீரிய ஒட்டு விதைகள் என்ற பெயரில் மரபணு மாற்று விதைகளை வழங்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி சாகுபடி செய்ததால் கொடிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி அழுகி அழிந்து போய்யுள்ளது. இப்படி சாகுபடி செய்யப்பட்ட வெங்காயங்கள், இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாமல் அழுகியுள்ளது. இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மரபணு மாற்று விதைகளை தடை செய்து உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார். நிகழ்ச்சியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சக்திவேல், விவசாயி பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

கரையை உடைக்குமா பெருச்சாளி?

பி.ஆர்.பாண்டியன் மேலும் கூறுகையில், ‘‘மதுரையில் 58ம் கால்வாய் அமைப்புப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதால், திறக்கப்பட்ட தண்ணீர் கரைகளை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. ஆனால் பெருச்சாளி, எலிகள் கரையை உடைத்து விட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் கூறுவது நகைச்சுவையாக உள்ளது’’ என்றார்.

Related Stories:

>