தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா: என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது...ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

சென்னை:  லைக்கா புரோடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லண்டன் பூங்காவிற்கு என் பெயரை சூட்ட வேண்டும் என்று என்னை அழைத்தார். உயிரோடு இருக்கும் போது பூங்காவிற்கு என் பெயர் வைக்க வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டேன்.

ரமணா படம் மிகவும் பிடித்ததால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விரும்பி அவரை வரவழைத்து கதை கேட்டேன். இணைந்து பணிபுரிய முடியவில்லை. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது.  வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து கபாலி, காலா படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

பின்னர், கார்த்திக் சுப்புராஜ், பழைய ரஜினியை பார்க்க வேண்டும் என்று சொல்லி சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘பேட்ட’ படத்தில் நடிக்க வைத்தார். இப்போது தர்பார் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடித்திருக்கிறேன். இயக்குனர் ஷங்கருக்கு பிறகு தனது படங்களில் சோசியல் மெசெஜ் சொல்லி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மும்பையில் கதை நடக்கிறது. நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், சஸ்பெண்ஸ், திரில்லர், ஆக்‌ஷன் படமாக தர்பார் படம் வந்துள்ளது. சந்திரமுகி படத்தைக் காட்டிலும், நயன்தாரா கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.

இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது. அந்த திறமை அனிருத்துக்கு இப்போதே இருக்கிறது. வரும் 12ம் தேதி முக்கியமான நாள். 69 வயதில் இருந்து 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். வரும் டிசம்பர் 12ம்தேதி எனது பிறந்த நாளை ஆடம்பரம்பாக கொண்டாடாதீர்கள். அன்று ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். நான் தமிழக அரசாங்கத்தை, விமர்சித்தாலும், அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் விழாவுக்கு இடம் கொடுத்ததற்காக அரசாங்கத்துக்கு மனமார்ந்த நன்றி. நல்ல நடிகன் ஒருவன் வந்தால் ரஜினி என பெயர் வைக்க வேண்டுமென பாலச்சந்தர் யோசித்துவைத்திருந்த ஒரு பெயரைத் தான் எனக்கு அவர் வைத்தார்.

ரஜினியை வைத்து படம் தயாரித்தால் நஷ்டம் ஏற்படாது என்று நம்பினார்கள். எனவே, நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது. இவ்வாறு அவர் பேசினார். இதில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அனிருத் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் முருகதாஸ் பேச்சு:

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் முருகதாஸ், நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் பெரிய ரசிகன் நான் என தெரிவித்துள்ளார். நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள், ஆனால் ரஜினிகாந்தை இயக்கியது நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல் உள்ளது. எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவரின் சாயல் ரஜினிக்கு இருக்காது. ஆனால் ரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும் என தெரிவித்தார்.

Related Stories: