இடஒதுக்கீடு, வார்டுவரையறையை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

சென்னை: இடஒதுக்கீடு, வார்டுவரையறையை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. திமுக சார்பில் அமைப்பு ெசயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் நேற்றைய முன்தினம் வழங்கியிருக்கிற தீர்ப்பினை முழுமையாக பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மக்களுக்கு சரியாக போய் சேரவில்லை. அதை விளக்குகின்ற வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் 9 மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த கூடாது என்பது மட்டுமல்ல, எஞ்சியிருக்கிற மாவட்டங்களுக்கும் ஏற்கனவே வகுக்கப்பட்டிருக்கிற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

அதாவது பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினையும், வார்டு மறுவரையறையையும் சட்டவிதிமுறைப்படி செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறார்கள். ஆகவே, அதன் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, எஞ்சியிருக்கிற மாவட்டங்களுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையரை சந்தித்து வலியுறுத்தினோம். அப்படி நீங்கள் பின்பற்றாவிட்டால் நீதிமன்ற தீர்ப்பு அவமதிப்புக்கு ஆளாக வேண்டியது வரும் என்று நாங்கள் விளக்கினோம். உச்ச நீதிமன்றம் எப்படி சொல்லியிருக்கிறதோ, அதில் ஒரு வரிகூட மிஸ் பண்ணாமல் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>