விழுப்புரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரின் மனைவி உயிரோடு எரித்து கொலை: மர்ம நபருக்கு போலீஸ் வலை

விழுப்புரம்:  விழுப்புரம் சுதாகர் நகர் கரிகாலன் தெருவில் வசித்து வருபவர் நடராஜன் (60). திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இந்திரா என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு குழந்தை இல்லாததால் திருக்கோவிலூரை சேர்ந்த லீலா என்பவரை நடராஜன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வேலாயுதம் (23) என்ற மகன் உள்ளார். தற்போது அவர் சென்னையில் தங்கி ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்திரா (56) சுதாகர்நகர் பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் நடராஜன் லீலாவை பார்ப்பதற்காக விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு சென்றுள்ளார்.

பிற்பகல் நடராஜன், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது இந்திரா உடல் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்திராவின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருந்தது தெரியவந்த்து. இதனடிப்படையில் அவரை மர்ம நபர்கள் இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டில் இருந்த துணிமணிகளை அவர் மீது போட்டு எரித்துக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர்  உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வட்டிக்கு பணம் கொடுக்கும் தகராறில் யாரேனும் இந்திராவை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை எரித்தார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>